Pages

Wednesday, March 14, 2012

பிரபாகரன் மற்றும் குடும்பத்தினர் குறித்த மர்மங்கள் விலகுமா?


பிரபாகரன் மற்றும் குடும்பத்தினர் குறித்த மர்மங்கள் விலகுமா?  
2009- மே மாதம் முள்ளி வாய்க்காலில் தமிழருக்கு எதிராக நடந்த படு குரூரமான இனப்படுகொலைகளுக்குப் பிறகு எழுந்த முக்கிய கேள்வி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அவரது குடும்பத்தினர் இருக்கிறார்களா… அவரது மரணம் குறித்த இத்தனை மர்மங்கள் ஏன்? இருக்கிறார் என்று பலரும் கூறுகிறார்களே… அப்படியானால் மூன்றாண்டுகள் கடந்தும் ஏன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை? அட ஒரு அறிக்கை அல்லது புகைப்படமாவது தரலாமே… 4-வது ஈழப் போர் உண்டா?
இப்படி பல கேள்விகள். எதற்கும் நேரடி பதில் இல்லை. எதிர்முகாமில் தமிழரென்ற போர்வையில், குடித்து விலைமாதர்களுடன் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கும் ஈனப் பிறவிகள் சொல்லும் எதுவும் நம்பத் தகுந்ததாயில்லை.
கடைசி வரை பிரபாகரனுடனிருப்பது போல் நடித்து எல்லாம் முடிந்ததும் எதிரணிக்குப் போன சிலரின் வாக்கு மூலங்களிலும் உண்மை இல்லை.
எனில் அவரைப் பற்றிய உண்மை என்ன? யார் சொல்ல முடியும்? ஆதாரங்கள் எங்கே? இப்படி மனதை அறுத்த கேள்விகள் பல.  இவற்றுக்கு நாளை ஒளிபரப்பாகவிருக்கும் சேனல் 4 வீடியோ பதில் சொல்லுமா.. அல்லது புதிய சர்ச்சைகளுக்கு அடிகோலுமா? தெரியவில்லை.
பல நாட்டு ராணுவ உதவி, போனஸாக அவர்கள் போட்டுக் கொடுத்த சதித்திட்டங்களுடன் ஈழப் போருக்கு முடிவு கட்டியது சிங்கள ராணுவம்.
விடுதலைப் புலிகளை ன் நிழலைக் கூட நெருங்க முடியாத நிலையில், பல ஆண்டுகளாக சொல்லி சொல்லி தோற்றுக் கொண்டிருந்த இலங்கை ராணுவம், லட்சம் வரையிலான  அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்க சகல பலமும் தந்தவை இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகளே!
சிங்களரின் இனவெறி கொடூரம் பக்கத்திலிருந்த தமிழ்நாட்டு மக்களை மட்டுமே எட்டியிருந்த நிலையில், அது  குறித்த வீடியோ ஆதாரங்களை உலகளாவிய ஒளிபரப்பாகச் செய்தது சேனல் 4. மறைக்கப்பட்ட உண்மைகளை அம்பலத்துக்குக் கொண்டுவந்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்து உலகம் அதிர்ந்தது.
அதுவரை இத்தனை ஆயிரம் பேரைக் கொன்றதாகச் சொல்கிறார்களே… இது மிகையாகத் தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பி வந்த உலக நாடுகள், உயிருடன் ஏதோ காக்கைகளைப் போல சுட்டுக் கொல்லப்படும் தமிழரைப் பார்த்து பேரதிர்ச்சி கொண்டனர்.
நாடுகள் தங்களுக்கிடையிலான அரசியலில் சிக்குண்டு இந்த விஷயம் குறித்து மவுனித்து நின்றாலும், மனிதாபிமானத்தை முன்னெடுத்துச் செல்லும் அமைப்புகள் பல நாடுகளின் இறுக்க வாயை திறக்க வைத்தன!
இலங்கையின் போர்க்குற்றம் என்ற வார்த்தை உலகளாவி நிற்கக் காரணம் இந்த வீடியோவும்தான்.
இந்த நிலையில் தற்போது இன்னொரு வீடியோ படத்தை சேனல் 4 உருவாக்கியுள்ளது. லண்டன் நேரப்படி புதன்கிழமை இரவு 10.55 மணியளவில் இந்த வீடியோ உலகம் முழுவதும் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த வீடியோவில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை, மனித இனமே வெட்கித் தலைகுனியுமளவுக்கு கொடூரமாக சிங்கள இனவெறி வீரர்கள் கொன்ற காட்சி அடங்கியுள்ளது. கூடவே தலைவர் பிரபாகரன் குறித்த பரபரப்புக் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாக இந்த ஆவணப்படத்தைத் தயாரித்த காலம் மெக்காரே தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணப் படத்தை இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பார்க்கலாம்.
ஐ. நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே ஆகிய நாடுகள் கொண்டு வந்துள்ளன. இந்தப் பின்னணியில் நாளை வெளியாகவுள்ள வீடியோ காட்சிகள்  இலங்கை மீதான அழுத்தத்தை பல மடங்கு அதிகரிக்கும், ஈழத் தமிழர் விடிவுக்கான முக்கிய ஆயுதமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரபாகரன் தொடர்பான வீடியோவை இப்போது ஒளிபரப்புவது ஏன்?
இன்னொரு பக்கம், சிங்கள இனவெறி ஒரு இனத்தையே எப்படியெல்லாம் சின்னாபின்னமாக்கிவிட்டது என்பதைக் காட்டும் ஒரு வீடியோவில், இன்னமும் இருக்கிறார் என பெரும்பான்மைத் தமிழர்கள் நம்பும் பிரபாகரன் வீடியோ எதற்கு? அதன் உள்நோக்கம் என்ன என்ற கேள்வியை ஈழத் தமிழர் இணையங்கள், அமைப்புகள் எழுப்பியுள்ளன.
சேனல் 4 தனது நடுநிலைத் தன்மையைக் காட்ட, பிரபாகரன் வீடியோவைக் காட்டுகிறது என்றும், அவரது இருப்பு குறித்து காலம் மட்டுமே பதில் கூற வேண்டும் என்றும் இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரபாகரன் தொடர்பான வீடியோ என ஏற்கெனவே இணையதளங்களில் ஏராளமான பதிவுகள் கிடக்கின்றன. இவை சிங்கள ராணுவம் மற்றும் இலங்கை அரசால் பரப்பப்பட்டவை. அவர்கள் பார்வையிலான பதிவுகளே அவை. அதில் ஏராளமான முரண்கள், சந்தேகங்கள். எனவேதான் இவற்றைப் பார்த்த பிறகும், பிரபாகரன் குறித்த நம்பிக்கையோடு உள்ளனர் உலகெங்கும் உள்ள தமிழர்கள்.
ஒருவேளை சேனல் 4 வீடியோவில் பிரபாகரன் குறித்த இதே காட்சிகளைப் பார்த்த பிறகு, அவற்றை ஏற்றுக் கொள்வார்களா தமிழர்கள்? மர்மங்கள் நீங்கப் பெறுமா? இலங்கையும் இந்தியாவும் கூட இன்னும் உறுதிப்படுத்த திணறும் ஒரு விஷயத்தை, எதன் அடிப்படையில் சேனல் 4 உறுதிப்படுத்த முனைகிறது என்ற கேள்விதான் இப்போது தமிழ்ச் சமூகத்தின் முன் நிற்கிறது!

No comments:

Post a Comment