Pages

Wednesday, March 14, 2012

நூலகத்தை மாத்தணும், புதிய தலைமைச் செயலகத்தை இடிக்கணும்… இங்கே என்னதான் நடக்குது?


அண்ணா நூலகத்தை மாத்தணும், புதிய தலைமைச் செயலகத்தை இடிக்கணும்…  என்னதான் நடக்கிறது இங்கே? – உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முறையாக பராமரித்து வருவதாகவும், அங்கு எந்த வசதியும் குறைக்கப்படவில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சியில் சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.172 கோடி செலவில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. இதனை நுங்கமபாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு இடமாற்றம் செய்ய தமிழக அரசு தீர்மானித்தது. கடந்த 2.11.2011 அன்று அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்.பிரபாகரன், பி. புகழேந்தி, ஓய்வு பெற்ற ஆசிரியை எஸ்.டி. மனோன்மணி, மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி உட்பட பலர் பொதுநல மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மறு உத்தரவு வரும் வரை நூலகத்தை இடமாற்றம் செய்ய இடைக்கால தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் நூலகத்தில் உள்ள வசதிகளை அரசு திரும்பப்பெற்றால் அதனை நீதிமன்றம் கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று தெரிவித்திருந்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், நூலகத்தை இடமாற்றம் செய்வதற்காக அரசு எடுத்தது கொள்கை முடிவு ஆகும். அதனை நீதித்துறை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தது.
இதனிடையே மனுதாரர்களில் ஒருவரான இளையபாரதி சார்பாக கூடுதல் மனு ஒன்றை மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தாக்கல் செய்தார். அதில் நூலகத்தில் உள்ள வசதிகளை அரசு குறைத்துவிட்டது. சந்தா செலுத்தி பத்திரிகைகளை வாங்குவது குறைந்துவி்ட்டது. எனவே, ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு ஒன்றை அமைத்து அங்கு ஏற்படுத்தப்பட்ட வசதிகளின் குறைவு குறித்து விசாரித்து அறிக்கை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இம்மனு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான பிளீடர் வெங்கடேஷ் நூலகத்தின் சில போட்டோக்களையும், பதில் மனுவையும் தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார்.
அப்போது அரசு பிளீடர் வெங்கடேஷ் கூறுகையில், “மனுதாரரின் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை. நூலகத்தில் எந்த குறையும் அவர் நேரடியாக பார்த்ததாக குறிப்பிடவில்லை. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்நோக்கம் உள்ளது. எந்த பத்திரிக்கை நிறுத்தப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கவில்லை. மனுவில் கூறியுள்ள அனைத்தும் பொதுவான குற்றச்சாட்டுகள் ஆகும்.
நூலகத்தை டி.பி.ஐ.க்கு மாற்றினால் தான் அந்த சுற்றுப்புறத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு பயன் ஏற்படும். தற்போது நூலகம் உள்ள இடத்தின் சுற்றுப்புறத்தில் 8 கல்வி நிறுவனங்கள் தான் உள்ளன. எனவே அதன் பயன் அங்கு குறைவாக உள்ளது. கன்னிமாரா நூலகத்தையும் பெரிதாக கட்ட அரசு முடிவு செய்துள்ளது,” என்றார்.
அதற்கு பதிலளித்த பி.வில்சன், “இவ்வழக்கில் எந்த உள்நோக்கமும் இல்லை. குற்றச்சாட்டுகளை மனுவில் தெளிவாக கூறியுள்ளோம். அது தொடர்பான போட்டோக்களையும் சமர்பித்துள்ளோம். நாங்கள் அங்கு சென்று பார்த்த போது ஏ.சி. எந்திரம் வேலை செய்யவில்லை. அங்கு வருகிறவர்கள் வியர்வையில் நனைந்தபடி புத்தகம் படிக்கின்றனர். உள்ளே எலி ஓடுகின்றது. எனவே கமிட்டி அமைத்து அங்குள்ள வசதி குறைவுகள் குறித்து விசாரிக்க வேண்டும்,” என்றார்.
அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது:
“நூலகம் அங்கு இருக்க வேண்டும் என்பதுதான் மக்கள் விருப்பமாக உள்ளது. ராணிமேரி கல்லூரியையும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றையும் இடிப்பதற்கு முன்பு முயற்சி நடைபெற்றது. தற்போது நூலகம் மற்றும் புதிய தலைமைச் செயலகத்தையும் இடித்து மாற்ற முனைகின்றீர்கள். என்னதான் நடக்கிறது?” என்றார்.
அப்போது மூத்த வழக்கறிஞர் காந்தி கூறுகையி்ல், “மற்ற இடத்தில் வேண்டுமானாலும் நூலகத்தை அரசு அமைக்கட்டும். ஆனால் அண்ணா நூலகத்தை அரசு மாற்றக் கூடாது. அதன் வடிவையும் மாற்றக் கூடாது,” என்றார்.
அதற்கு பதிலளித்த அரசு பிளீடர், “நூலகத்தை அரசு முறையாக பராமரித்து வருகின்றது. எந்த வசதிகளும் குறையாமல் தொடர்ந்து அதனை அரசு பராமரிக்கும்”, என்றார்.
அரசு உத்தரவாதம் அளித்ததை அடுத்து மனுதாரர் தனது மனுவை திரும்பப் பெற்றார். நூலகத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் மனுதாரர் மீண்டும் மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். நூலகம் தொடர்பான முக்கிய வழக்கை ஏப்ரல் 17ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இளையபாரதி மனுவுக்கு பதிலளித்து, பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் சபிதா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
அரசியல் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்ட பிறகு இது போன்ற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நூலகத்தை பராமரிக்காமல் அதை அப்படியே விடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறு.
அங்குள்ள அனைத்து வசதிகளையும் மேம்படுத்தியுள்ளோம். கழிவறைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். மின்தடை இருக்கும் நிலையில் கூட தானாக இயங்கும் ஜெனரேட்டர் வைக்கப்பட்டு மின் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள புத்தகங்கள், பத்திரிக்கைகள் எதுவும் குறைக்கப்படவில்லை. அனைத்து ஊழியர்களும் அங்கு தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment